தீங்கு விளைவிக்கும் வழியில் வாழ்தல்

நான் மூன்றாம் வகுப்பில் இருந்தபோது ஒரு நண்பனிடம் என் வீட்டிற்கு தூங்க வருகிறாயா என்று கேட்டேன், அடுத்த நாள் அவன் வந்து சொன்னான், "என்னால் தூங்க வரமுடியாது, ஏனென்றால், உன் தாயும் தகப்பனாரும் குடிகாரர்கள் என்று என் பெற்றோர் கூறுகிறார்கள்" அந்த கணத்தில் தான் அது என்னைத் தாக்கியது:—எனது குடும்பம் ஒரு இயல்பான குடும்பம் அல்ல. எனது பெற்றோர்கள் குடிகாரர்கள்—எனது பெற்றோரின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களும் குடியைச் சுற்றியே இருந்தது. அது மட்டுமே எனக்குத் தெரியும்.

இன்னொரு குடும்பத்தினருடன் நானும் எனது சகோதரியும் இரவு உணவு அருந்தும் போது தான் நிதர்சனம் இன்னும் கடுமையாகத் தாக்கியது. அப்போது மது அருந்துதல் அல்லது சண்டை போன்ற எதுவும் நடக்கவில்லை. அவர்கள் இணைந்து விளையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். வீட்டை விட்டு தூரத்தில் இருந்தால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்பதை உணர்வதற்கு வேறு எதுவும் எங்களுக்குத் தேவைப்படவில்லை. ஆதலால் முடிந்தவரை வீட்டை விட்டு விலகி வெளியே இருக்க முயற்சித்தோம். எனது மாமா அருகில் குடியிருந்தார், ஆகவே என் பெற்றோர்கள் குடித்துவிட்டு கட்டுபாட்டை மீறி சண்டையிட்டுக்கொள்ளும் சில சமயங்களில் இரவில் தங்குவதற்கு நாங்கள் அவர் வீட்டுக்கு தப்பித்துச்சென்று விடுவோம். அடுத்த நாள் காலையில் நாங்கள் திரும்பி வரும்போது சில சமயங்களில், உடைந்த மரசாமான்கள் மற்றும் சிதறிய பாத்திரங்களுடன், வீடு தாறுமாறாகக் கிடக்கும்.

நான் அடிக்கடி பரணுக்கு படுக்கச் சென்றுவிடுவேன், அது தான் என் படுக்கை அறை. ஆனால் அது அவ்வளவு அடைக்கலம் தரும் இடமாக இல்லை. என் பெற்றோர்கள் கீழேயுள்ள அவர்களது படுக்கையறையில் சொற்கள் மூலமாகவும் உடல் ரீதியாகவும் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொள்வதை நான் கேட்க முடிந்தது. எந்தக் குழந்தையும் நான் கேட்டதைக் கேட்கக்கூடாது அல்லது நான் பார்த்ததை பார்க்கக்கூடாது. என் தந்தை எனது தாயை மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதை நான் பார்த்ததை என் தந்தை அறியவில்லை. என் தாயார் இடுப்பு உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனது தகப்பனார் கோபக்கார குடிகாரராக இல்லாத சந்தர்ப்பங்களில் சோகமயமான குடிகாரராக இருப்பார். சில சமயங்களில் வீட்டிற்கு வந்து என்னை எனது படுக்கையிலிருந்து எழுப்பி அவரது சோக வாழ்க்கைக் கதைகளை என்னிடம் சொல்லுவார், நிச்சயமாக அப்போது நான் ஒரு குழந்தையாக இருந்ததால், பேசாமல் அங்கு உட்கார்ந்து என் தந்தை அழுவதை பார்த்துக் கொண்டிருப்பேன். நான் உணர்ச்சியற்று இருப்பேன். "இதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லையே" என்று எண்ணியது என் நினைவில் உள்ளது.

வாழ்க்கை உண்மையிலேயே வாழ்வதற்கு தகுதியானதா என்று எண்ணும் நிலைக்கு நான் வந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே தெரியும் பெரிய மரத்தை வெறித்துப் பார்ப்பேன் அதில் தூக்கிட்டு தொங்குவதாக கற்பனை செய்துகொள்வேன். ஒரு மெல்லிய பிளைவுட் துண்டில் எனக்காகவே ஒரு கல்லறை கல்லை தயாரிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டேன். மேலே பரணில் ஒரு கார்பெட்டுக்குக் கீழே மறைத்துவைத்த அது இன்னும் அங்கே தான் இருக்கிறதா என்று சில சமயங்களில் நினைத்துப் பார்ப்பேன்.

எந்தக் குழந்தையும் நான் கேட்டதைக் கேட்கக்கூடாது அல்லது நான் பார்த்ததை பார்க்கக்கூடாது.

இதிலிருந்து தப்பிக்க எனக்கு உதவியது எனது சிறப்பான கல்வி செயல்திறன், அது எனக்கு பல்கலைக்கழகத்துக்கு செல்ல வழி செய்தது. அங்கு நான் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டேன் மற்றும் (டீன்) முதல்வர் பட்டியலில் இடம்பிடித்தேன். அதுபற்றி கேள்விப்பட்ட என் தந்தை என்னை பற்றி பெருமையாக உணருவதாக என்னிடம் முதலாவதும் கடைசியாகவும் சொன்னார். எனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அவர் உண்மையில் கவனிக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்த இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில் இது ஒன்று.

என்னளவில் நான் குடிக்கு அடிமையாகவில்லை, ஆனால் மதுவின் தாக்கம் என்னுடனேயே தங்கிவிட்டது. செயல்படாத அம்மாதிரி ஒரு குடும்பத்தில் வளர்ந்ததனால், ஒரு குடும்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான முன்மாதிரி என்னிடம் இல்லை. நான் ஒரு கணவனாக மற்றும் தந்தையாக ஆன பொழுது, இயல்பானது எது என்று கண்டறிய முயற்சித்துக்கொண்டு நான் ஒரு முற்றிலும் அந்நிய சூழலில் கடந்து செல்வதாகத் தோன்றியது.

அதில் ஒரு உணர்வு குறைபாடும் இருந்தது. என் பெற்றோர்கள் மது இல்லாமல் எதிர்மறை உணர்வுகளை எதிர்கொண்டதை நான் கண்டதேயில்லை. குழந்தைகளான எங்களின் உணர்வுகளை எப்போதும் அவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. எங்களில் யாராவது ஒருவர் அழத் தொடங்கினால், என் தந்தை, "அழுவதை நிறுத்து இல்லாவிட்டால் உன்னை அழவைப்பதற்கு உண்மையிலேயே நான் ஏதாவது செய்ய நேரிடும்" என்று சொல்வார். பல்கலைக்கழகத்தில் இருந்த போது எனது தாயாரை கட்டி அணைத்த நினைவு இருக்கிறது. அவர் ஒரு பலகை போல இறுக்கமடைந்தார். மென்மையான உணர்வுகளை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நான் அப்போது தான் அதை எவ்வாறு கொடுப்பது என்று கற்றுக்கொண்டிருந்தேன்.

பல வருடங்களாக நான் பெரும் ஏமாற்றத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். திரும்பிப் பார்க்கும் போது வேறு குடும்பம் ஏதாவது ஒன்றினால் வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆசைப்பட்டேன். “பாவம் அவன்” என்ற இசைத்தட்டு பின்புலத்தில் எப்போதும் இசைத்துக்கொண்டே இருந்தது—நான் ஏன் இவ்வாறு வளர்க்கப்பட வேண்டும்? வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொள்வேன். குறிப்பாக எனது தந்தைக்கு எதிரான எனது கசப்பான மற்றும் கோப உணர்வுகளை அடைத்து வைத்திருந்தேன்; அது என்னை நலிவடையச் செய்தது.

நான் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லாவிடில் மனக்கசப்பு என்னை கட்டுப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும்.

பல்கலைக்கழகத்தில் சில வருடங்கள் கழிந்த பிறகு, எனது தந்தையை நான் மன்னித்து அவரிடம் அன்பு பாராட்டுவதற்கு ஒரு வழியை கண்டறிய வேண்டும் என்று யாரோ சொன்னார்கள். என் முன் இரண்டு வாய்ப்புக்கள் இருப்பதை நான் உணர்ந்தேன். நான் தொடர்ந்து கசப்புணர்வு மற்றும் கோபத்தை கொண்டிருந்து விலகிச் செல்லலாம், அது எனக்கோ அல்லது எனது உறவுகளுக்கோ நன்மை பயக்காது என்று ஏதோ ஒருவகையில் எனக்குத் தோன்றியது. அல்லது நான் வளர்ந்த விதம் அது நல்லதோ கெட்டதோ, மற்றும் எனது பெற்றோர்கள் குறையுள்ளவர்கள், என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லாவிடில் மனக்கசப்பு என்னை கட்டுப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும்.

இறுதியில் எந்த வித தயக்கமோ அல்லது குற்றச்சாட்டுகளோ இன்றி, அவரிடம், “அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்” என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன். அது அவருடனான ஒரு புதிய உறவை தொடக்கி வைத்தது. அவர் மிகவும் வெளிப்படையாக இருக்கத் தொடங்கினார். ஒரு நாள், எனது தந்தைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அவரைப் பற்றி எனக்கு நினைவில் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு தான் அதை எழுதினேன். அதற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை, ஆனால் எப்படி எழுதுவது என்பதை எப்போதாவது அவர் உண்மையில் கற்றுக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் எனது தாய் பதில் அளித்தார். அவர் எழுதினார், “உன் தந்தை உனது கடிதத்தைப் படித்தார். அதன் பின் அவர் அழுதார். அது தான் அவருக்குத் தேவையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.” அது எனக்கு உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1989 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த போது அது எங்கள் உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

மதுப்பழக்கம் உள்ள பெற்றோர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா? நீங்கள் சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் தீர்க்க முடியாத மனக்காயங்கள் எதுவும் உள்ளதா? நீங்கள் தனிமையானவர் அல்ல. உங்கள் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும், எங்கள் குழுவில் உள்ள ஒருவர் அதைக் கேட்க விருப்பமாக இருக்கிறார். தயவு செய்து உங்கள் தொடர்புத் தகவல்களை கீழே குறிப்பிடுங்கள், விரைவிலேயே உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம்.

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் முதலெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
புகைப்பட கிரெடிட் Yogendra Singh

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.